Sri Lalitha Sahasranamam

எண்ணியதை நிறைவேற்றிடும் ஸ்ரீ விநாயகா
ஏற்றமே எந்நாளும் தந்திடுவாய்
போற்றியே நின்னையே சரணடைந்தோம்
புகழ்யாவும் அளித்திடுவாய் ஸ்ரீ கணபதியே

ஓம்
உயிரினம் வாழ்ந்திடவே, உயர்வெல்லாம் பெற்றிடவே
பேரின்ப செல்வமதை நல்கும் தாயே
நின்னை, வணங்குகின்றோம்

அனைத்தைய துன்பங்களை தீர்ப்பவளே
அழியாத இன்பமதைத் தருபவளே
பாசமென்ற கருணை நிலவானவளே
பரிவுடன் காத்து ரட்க்ஷிக்கும் ஸ்ரீலலிதாம்பிகையே
ஒப்பும் உவமையும் இல்லாதவளே
சிம்மமதை வாகனமாய் கொண்டவளே
பண்டாசூரனை வதம் செய்திடவேண்டி
இந்திரன் செய்த யாகத்தின் புனிதமாக, அக்னி குண்டத்திலிருந்து எழுந்த ஸ்ரீ மஹா த்ரிபுரசுந்தரியே
விருப்பம் என்ற பாசமதை உடையவளே
கொடும் செயலை அழிக்க அங்குசத்துடன் ஜ்வலிப்பவளே
நெஞ்சமென்ற கரும்புவில்லைப் பெற்றவளே
ஐந்துகல் மாத்திரைகளை உடையவளே
சிவந்த திருமேனியின் அழகினால், உலகினை மூழ்கச் செய்பவளே

சம்பகம், அசோக மலர்களை கூந்தலில் சூடி இளமை கொஞ்சுபவளே
நிலவு போன்ற நெற்றியிலே, கஸ்தூரி திலகமுடன், மன்மதன் இல்லத் தோரணங்கள் போன்ற புருவம் உடையவளே
முகப் பொலிவென்ற உள்ளமதில், நீந்திடும் மீன்கள் போன்ற நயனங்களின் நாயகியே
மலர்ந்திட்ட பொலிவான நாசியிலே, தாரகையின் ஒளிமிஞ்சும் மூக்குத்தி அணிந்தவளே
சந்திர சூரியர்களை தோடுகளாக அணிந்துமே
கோவைப்பழம் போன்ற அதரங்களுடன், சுத்தவித்தை முளைத்ததுப் போன்ற இருபல் வரிசைகளைக் கொண்டவளே
ரத்தினக் கலசம் போன்ற ஸ்தனங்களால் ஈசனையே மயங்கச் செய்த மாதாவே
நிகரற்ற அழகான இடைதனை உடையவளே
முப்பட்டையான மோகிக்கச் செய்யும், மூன்று மடிப்புகளை வயிற்றினில் கொண்டவளே

திருவடித் தாமரைகளில், வணங்குவோர் மன இருளை நகமென்ற ஒளியாலே நீக்குபவளே
காமேஸ்வரன் துடையில் அமர்ந்திட்ட அன்னையே
சிவத்தின் தத்துவமாகி, தனக்கே உரிய துணைவனை அடைந்திட்ட லோகரட்சகியே
மேருவின் மையச் சிகரமதில் நிலைத்த ஸ்ரீ நகர நாயகியே
நிலைத்ததை தந்திடும் சிந்தாமணி இல்லத்தில் இருப்பவளே
ஐந்து பிரம்மர்களை ஆசனமாய் உடையவளே
தாமரைக் காட்டில் உறைபவளே
கதம்ப வன வாசியே
அமிர்தக் கடலின் மத்தியில் வாழ்பவளே
கடைக்கண் கருணையதால், இஷ்டங்களை ஈடேற்றித் தருபவளே
பண்டாசுரனை வதம் செய்திடச் சக்தி சேனையுடன் புறப்பட்டவளே
ஸ்ரீ சக்ரமென்றத் தேரினில், சகல ஆயுதங்களுடன் காணப்பட்டவளே
ஜ்வாளா மாலினி சக்தியால் உருவான அக்னி கோட்டையின் மத்தியில் இருந்தவளே

பண்டாசுரன் படைதனை அழித்த சக்திகளை கண்டு மகிழ்ந்தவளே
சர்வாஸ்திர அஸ்திரமதை பண்டாசுரன் விட்டதுமே
ஹிரண்யன், ராவணன், சிசுபாலன் என்ற அரக்கர்கள் தோன்றிடவும்
கைவிரல் நக நுனிகளால், ஹரியின் தசாவதாரங்களை தோற்றுவித்துமே, அசுர வடிவங்களை அழித்து ஆர்பரித்த ஸ்ரீ லலிதாம்பிகையே
காமேஷ்வர அஸ்திரத்தால், பண்டாசுரனையும், சூன்யா நகரமதை தீயாக்கியவளே
பிரம்மா, விஷ்ணு, இந்திராதி தேவர்களால் துதிக்கப்பட்டவளே
சிவனது நெற்றிக் கண்ணால் எறிக்கப்பட்ட மன்மதனை
மீண்டும் உயிர்த்தெழச் செய்து அருளிய மாதாவே

ஸ்ரீமத் வாக்பவ குண்டமே
நினது முகத் தாமரையாகும் கண்டத்துக்கு கீழான இடுப்புவரை பகுதியே காமராஜ கூடமாகும்
இடுப்புக்கு கீழான பகுதியே சக்திகூடமாகும்
மூலமந்திர உட்பொருளின் தானாக இருப்பவளே
மூலமந்திர முக்கூடங்களின் கருத்தாக தன் காரண உருவின் மூன்று பங்குகளாகக் கொண்டவளே

பார்ப்பவர் பார்வை பார்க்கப்படுவதென்ற த்ரிபுர குலமான மகிழ்வு அமிர்தம் பருகுபவளே
ஷட்சக்ரங்களுக்கு மேல் உள்ள அகுல சகச்சாரத்தில் இருப்பவளே
மணிபூரகச் சக்ரமதில் சர்வாபரணங்களுடன் மின்னுபவளே
மூலாதாரத்தில் சிறப்பாக நிலைத்தவளே
விஷ்ணு முடிச்சினை பிளந்திடும் சக்தி படைத்தவளே
சுதா எனும் அமிர்தம் அதை நிரம்பச் செய்பவளே
புருவத்தின் நடுவில் ஆக்ஞா சக்கரத்தின் மத்தியில் இருப்பவளே

மின்னலைப் போன்ற எல்லையற்ற ஒளி படைத்தவளே
பாஹ்ய பூஜை, மானஸ பூஜைகளால் உள்ளம் நெகிழ்பவளே
குண்டலினி வடிவமாகி, ஜீவ சக்தியான உயிரினை எழுப்புபவளே
தாமரை இதழ் போன்ற மெல்லிய தேவியே
குடும்பம் உயர்ந்திட உயிரினை தரும் சிவபத்னியே
பக்தர்களை ரக்ஷிக்கும் சௌபாக்ய தாரிணியே
சம்புவின் துணைவியே, நவராத்திரி தெய்வமான சாரதாவே
லக்ஷ்மி கடாஷம் தனைத் தந்திடும் இனிமைத் திருவுருவே
கற்புக்கரசியாகி காலமாய் ஆனவளே
கார்கால திங்கள் போன்ற வதனமுடையவளே
பொறுமைக்கே தத்துவமான ஞானப் புதுமலரே
குற்றமே அற்றவளான சீலகுணக் குன்றமே

தானே யாவற்றுக்கும் ஆதாரமாகி, தனக்கு அடிப்படை இல்லாதவளே
பந்தபாசம் விட்டவளாகி, அழுக்காறு அற்றவளே
உருவமற்றவளாகி கலக்கமற்றவளே
மூன்று குணங்களுக்கும் அப்பாற் பட்டவளே
அகண்ட ரூபிணியாகி, ஆசையை விட்டவளே
அழிவில்லாதவளாகி என்றும் முக்தி தருபவளே
மாறுதல் இல்லாதவளாகி, எப்பொழுதும் தூய்மையானவளே
காரணமேயற்றவளாகி, குற்றமில்லாத குணமயிலானவளே

மதமேயில்லாதவளாகி, மதமதை துவம்சம் செய்பவளே
கவலையே காணப்படாதவளாகி, அகம்பாவம் அற்றவளே
பாவமற்றவளாகி, பாவமதை தீர்ப்பவளே
கோபமே விட்டவளாகி, கோபத்தை அழித்து நிற்பவளே
சந்தேகம் காணப்படாதவளாகி, சந்தேகம் தனை அகற்றுபவளே
என்றுமே பிறப்பற்றவளாகி, பிறவிப் பெருங்கடன் தீர்ப்பவளே
வேற்றுமையே காணாதவளாகி, வேற்றுமை களைபவளே
நாசமே தீர்ப்பவளாகி, அடியாரை மரண பயத்திலிருந்து மீட்பவளே

பக்தியில்லாதவரை நீண்ட தொலைவு தள்ளிவைப்பவளே
துர்கையாய் ஆனவளே துன்பமெல்லாம் துடைப்பவளே
அழியாத சுகமெல்லாம் அள்ளியே தந்திடவே
துணையாக வரும் தோஷமற்றவளே
ஸ்ரீ லலிதாம்பிகையே
அந்தர்யாகம் பஹூர் யாகமென்ற பூஜா வழிகளை வகுத்து தந்தவளே
மந்திர-யந்திர-தந்திர முறைகளை அளித்திட்டவளே
முதன்மையான ஸ்ரீ சக்ரம் போன்ற யந்திரங்களின் இதயமானவளே
அறவோர் உள்ளமதும் தத்துவ பீடங்களையும் ஆசனங்களாய் அடைந்தவளே

மஹா யாகங்களால் துதிப்பதற்கு உரிமையானவளே
மஹா கல்பமதில், மஹேஷ்வரன் செய்திட்ட மஹா தாண்டவத்தின் சாட்சியானவளே
அறுபத்தி நான்கு கோடி யோகினி கணங்களால் வணங்கப்பட்டவளே
மனுவினால் உபாசிக்கபட்ட ஸ்ரீ வித்யா வடிவானவளே
சராச்சர பிரபஞ்சமதின் தாயாகி, ஸ்ரீ சக்ரமதில் வாழ்பவளே
பஞ்சபிரம்ம வடிவமாகி சைதன்ய ரூபமானவளே
த்யானம், ஜ்யாதா, ஜேயம் என்ற மூன்று வடிவமாகி நீதிக்கும், அநீதிக்கும் அப்பாற்பட்டவளே
யாவற்றையும் படைத்த பிரம்ம வடிவமாகியும், உயிரெல்லாம் காத்திடும் கோவிந்த உருவமானவளே
அழித்தலை புரிந்திடும் ருத்ர வடிவமாகி, மறைத்திடுபவளான ஈஷ்வரியானவளே
சதாசிவ வடிவமாகி அருளினைப் பொழிந்து ஐவ்வகை செய்கைகளுடன் இணைந்த அன்னையானவளே
சூரியமண்டல மத்தியில் காணப்படும் காயத்ரியே
பகமாலினி என்ற நித்யா தேவதையானவளே
படைப்பு கடவுள் முதல் புல் புழுவரை யாவற்றையும் ஸ்ருஷ்டித்தவளே
அறம் பொருள் இன்பம் வீடு என்ற நெறிகளை அளித்தவளே
ஆதியும் அந்தமும் காணமுடியாதவளே
திருமால் நான்முகன் இந்திரனால் வணங்கப்பட்டவளே
வேதங்களால் உணரப்பட்டவளே
விந்தைகள் பல செய்து வாழ்வினை ரம்யமாக்கும் தாயே

ஷேத்ரங்களுக்கு தலைவியாகி, ஷேத்ரக்ஞனை பரிபாலிப்பவளே
எப்பொழுதும் வெற்றி தத்துவமாகி, அனைவராலும் வணங்கப்படுபவளே
வாக்பாதினி என்ற சக்தி வடிவினள் ஆகி, முனிவர்களால் துதிக்கப்படுபவளே
சுவதர்மம் விட்டவர்களை அழிப்பவளே
நினது மகிழ்வினால் பிரம்மாவின் மகிழ்வை ஒரு திவலை ஆக்குபவளே
ப்ஹ்பணா என்ற சப்த ஸ்வரூபிணியாகி, அறிவைத் தன்னுள்ளே நிலை நிறுத்தியவளே
எல்லா பொருட்களையும், தன்னுள்ளே கொண்டுமே, அனைத்தய தேவதைகளுக்கும் சக்திதனை பொழிபவளே
காமனால் துதிக்கப்பட்டு, ஷ்ருங்கார ரசம் நிறைந்தவளே
ஜாலந்தர பீடத்தில் இருப்பவளே
ஒட்டியாண பீடத்தில் இணைத்தவளே
பிந்து மண்டலத்தில் வாழ்பவளே
ரகசிய யாகத்தால், பூஜிக்கப்படும் தாயே
ஆறு கங்க தேவதைகளுடன் கூடியவளாகி, ஆறு குணங்கள் கொண்டவளே
வித்தை, அவித்தை என்ற இரண்டு உருவானவளே
அம்மா என அன்புடன் அழைக்கும், அயி என்ற சொல் அமிர்தமானவளே
குருகுள்ளா தேவியே, கௌல மார்க்கமதில் மனம் கொண்டோரால் வணங்கப்படுபவளே
வேலனுக்கும் விநாயகனுக்கும் தாயானவளே
நந்தினியாய் வந்தவளே
முக்கண்ணியே
உணர்ச்சிகளின் வடிவமாகி, உணர்வுப் பிழம்பானவளே
சித்த வித்யா ரூபிணியே
சித்தர்களின் தாயாகி, எல்லையற்ற புகழ் படைத்தவளே
இஷுத்தி சக்ரத்தில் நிலைத்து சிறிது சிவப்பானவளே
முக்கண்ணுடன் கட்வாங்கம் போன்ற ஆயுதம் தரித்த ஒருமுகத் தாயே
பாயஸ அன்னத்தில் ஆசை கொண்டுமே, அமிர்தா போன்ற வலிவுள்ள சக்திகளால் சூழப்பட்டவளே
தாகிணீஷ்வரி என்ற பெயர் பெற்றவளே
அனாஹத கமலம் கண்டு, பச்சை இணைந்த கருப்பு நிறம் உடையவளே
இருமுகங்கள், கோரைப் பற்களுடன் ஜபமாலை அணிந்தவளே
ரத்தத்தில் நிலைத்துமே, காளராத்ரீ போன்ற சக்திகள், நின்னை சுற்றியிருக்க, நெய் நிறைந்த அன்னத்தில் ஆசை கொண்டவளே
ராகினி என்ற உருவகம் ஆனவளே

மணிபூரகக் கமலத்தில், மூன்று முகங்களுடன், வஜ்ரம் முதலிய ஆயுதங்களைத் தரித்தவளே
சிவப்பு நிறமுடன், தாமறி போன்றோரால் சூழ்ந்து காணப்படுபவளே
மாமிசத்தில் ஒன்றாகி, வெல்லம் நிறைந்த அன்னத்தில் ப்ரீதி உடையவளே
அடியவரை காத்திடும் லாகினி ஆனவளே
ஸ்வாதிஷ்ட்டான கமலத்தில் இருந்து, நான்கு பொலிவு முகங்களுடன், சூலம் போன்ற ஆயுதங்களுடன்
பொன்னிற மேனியளாய், கொழுப்புதரும் தாதுவில் நிறைந்து பத்ரகாளி போன்றோர் இணைந்து நிற்க
தயிரன்னத்தில் ஆசைகொண்ட காகினி ஆனவளே
மூலாதார கமலத்தில் நிறைந்திருந்து, ஐந்து முகங்களுடன், எலும்புடன் இணைந்து அங்குசம் போன்றவை தரித்துமே
வரதா போன்ற சக்திகள் புடைசூழ பயத்தம்பருப்பு கலந்த அன்னத்தில் நாட்டமிக்க சாஹினி ஆனவளே
ஆக்ஞாசக்ர தாமரையில் நிலைத்தவளாகி, வெண்மையுடன் ஆறு முகங்களுமாய் மஜ்ஜை என்ற தாதுவில் நிறைந்து
ஹம்சவதி என்ற சக்திகள் சூழ்ந்திட, மஞ்சள் பொங்கலில் ஆவல் கொண்ட ஹாகினி ஆனவளே
ஆயிரம் தளங்கள் கொண்ட தாமரையில் வீற்றிருந்துமே, எல்லா நிறங்களுடன் ஒளிதந்து சகல ஆயுதங்களை தரித்து
சுக்கில தாதுவின் தேவதையாகி, எங்கும் திருமுகம் கொண்டுமே எல்லா அன்னங்களையும் ஏற்று யாகினியான அம்பிகையே
சுவாஹா ரூபமானவளே
ஸ்வதா வடிவமானவளே, மாயையாய் இருப்பவளே
அறிவில் உயிரானவளே, வேதநாதமானவளே
வேதக் கருத்தினை, முனிவர்கள் தெரிவித்த ஸ்மிருத்தியானவளே
தனக்கே உவமை இல்லாதவளே, புண்ணியத்தின் புகழ் யாவும் தனக்கே உரித்தானவளே

மஹாவித்யா, ஸ்ரீவித்யா அமைப்பானவளே
காமேஷனால் பூஜிக்கப்பட்டு, காமகோடியாய் விளங்குபவளே
ஷீஷோடசாக்ஷ்ரீ வித்தையின் இதயம் போன்றவளே
நின் கருணை வேண்டி ஏவல்புரியும், கோடி லக்ஷ்மிகளை கொண்டவளே
பிரதமை முதல் பௌர்ணமி வரையிலான பதினைந்து திதி மண்டலங்களில் ஆராதிக்கப்படுபவளே
நின் இடப்புறம் திருமகளும், வலப்புறம் கலைமகளும்
சாமரம் வீசி வணங்கப்படுபவளே
க்லீம்காரபீஜ வடிவமான ஸ்ரீ பராசக்தியே
காமதேனுவாகி இஷ்டமதை தருபவளே

புவனமதை தன் வயிற்றில் தாங்கிய, ஹிரண்யகர்ப்ப வடிவானவளே
எல்லா உபநிடதங்களாலும் உணரப்பட்டவளாகி நான்கு யுகங்களையும் தன்னுள்ளே கொண்டவளே
இச்சா சக்தி, ஞான சக்தி, க்ரியா சக்தி தோற்றமானவளே
சாம்ராஜ்யபதவி வைகுந்தம் கைலாசம் தனை அளிப்பவளே

அலையாய் எழுந்துவரும், சுருண்ட முன்கேசம் கொண்டவளே
சூரிய வடிவானவளே
சுகமெல்லாம் தருபவளே
அடியவர்களின் செல்வக் குவியல் ஆன தாயே
மைபோன்ற வாசனைகளால் அடையப்பட்டவளே
சிந்தித்திடவே முடியாத சீர்மிகு தமிழானவளே
கலிதோஷமதை போக்கவந்த காத்யாயினி ஆனவளே
மாதுளம் பூப்போன்ற திருமேனியானவளே
மான்விழிகள் சுழற்சியதால் மயக்கமதை தருபவளே
தாம்பூலம் தரித்த செம்பவள வாய் கொண்டவளே
கண்டவரை மயங்கச்செய்யும் மோகத் திருவடிவே
நிஷ்டையின் எல்லையில் இருப்பவளே
தாமரைப் பொடிப் போன்ற புயங்களை உடையவளே

தெய்வீக நறுமணமுடன் கூடியவளே
உமா என பாசமுடன் அழைக்கப்படுபவளே
கௌரி ஆனவளே
கந்தர்வர்களால் வணங்கப்படுபவளே
பூமா என்ற பரமார்த ரூபிணியே
நாமபாராயணத்தில் எல்லையில்லா மகிழ்வு கொள்பவளே
செம்பருத்தி பூநிறம் உடையவளே
யக்ஞ வடிவானவளே
துதிப்பதற்கு உரிய பர்வத ராஜகுமாரியே
மாசற்றவளே
சத்ய, ஞான, ஆனந்த, உருவானவளே

வயது முதிர்ந்தவளே
வரலாறு கொண்டவளே
பெரிய நாயகியே
அந்தணன் துணைவியே
காலத்தின் அர்த்தமாகி காலமாய் ஆனவளே
இ என்ற அக்ஷ்ர வடிவானவளே
இயற்கையாகவே இனிமை பொருந்தியவளே
எக்காலமும் உதயமாகி இருப்பவளே
கொடையில் நாட்டம் கொண்டவளே
தர்மத்தின் இலக்கணமே
பெருந்தன்மை வடிவான தாயே
ஸ்ரீ மஹேஷ்வரியே
இந்திராணியால் துதிக்கப்பட்டவளே
அவரவர் புண்ணிய பாவ அடிப்படையில், வாழ்வை அமைத்து தருபவளே
ஆகாயம் போன்ற அனைத்தய உலகினையும் படைத்தவளே
யாவற்றுக்குமே முதன்மை வடிவான தாயே

தன்னையே அடையச்செய்யும் மாதாவே
சகலவிதமான மரண அச்சம் போக்கி, சமாதானம் செய்பவளே
அர்த்தநாரீஷ்வர தத்துவமதின் விமர்ஷ உருவானவளே
சகல பிணிகளையும் போக்கி, மனோதிடம் தருபவளே
பிரம்ம ஞான மலராகி, கைலாயம் தனில் அமர்ந்திருப்பவளே
ஆத்மவித்யா தாயாகி, நவதுர்கை வித்தையாய் ஆனவளே
உலகின் முடிவுநேரமதில் வரப்போகும் ப்ரளயமதின் சாட்சியானவளே
பராசக்தி வடிவமாகி, பாருக்கே புண்யநிழல் தருபவளே

உலகினை ஆட்சி செய்வோர்க்கெல்லாம் தலைவியாய் விளங்குபவளே
புனிதம் என்ற கனிவு நதியேயாகி பூரித்தே வருபவளே
தான் என்ற அகம்பாவம் அழித்திடவே, தக்ஷ்னின் யாகமதை நாஷம் செய்தவளே
மயங்கியவள் போன்று காணப்படுபவளே
மாத்ருகா வர்ண ரூபமானவளே
வானவில் போன்று ஒளிபடைத்தவளே
இதயத்தில் நிறைந்திருந்து இளமை பொருந்தியவளே
காவிய வர்ணனைகளில் நிறைந்திருப்பவளே
மிகவும் ரகசிய வடிவானவளே
பிரம்மாண்ட மண்டலங்களை வேடிக்கையாக உருவாக்கியவளே
தன்னையன்றி வேறு எதுவுமே இன்றி தனித்து இருந்திடும் தாயே

அடியவர் பசிதீர அன்னமதை தருபவளே
மங்கல நாயகியே
மனதினில் நிறைந்தவளே
உயர்நலம் தந்திடும் உத்தமியே
ராஜாதி ராஜர்களுக்கெல்லாம் ஈஷ்வரியான அன்னையே
உலகுக்கே முதன்மையான யாவற்றிலும் சிறந்தவளே
பரிசுத்தத்தின் பரிசுத்தமான அநேக கோடி பிரமாண்டங்களை தோற்றுவித்தவளே
மும்மூர்த்திகளுக்கும் முந்தையவளான மூத்தவளே
நற்குணங்கள் யாவற்றுக்கும் நடுநாயகமாக இருப்பவளே

மூவுலகங்களாலும் துதிக்கப்படுபவளே
மூன்று அட்சர வடிவமாகிய தெய்வீகத் திருமலர் ஆனவளே
உண்மையும் மகிழ்வுமே ஒன்றாக இணைந்திருப்பவளே
அகத்தியர்த் துணைவி லோபாமுத்திரையால் பூஜிக்கப்பட்டவளே
தனது கருணையதால் த்வைத த்ருஷ்டி தீர்ப்பவளே
த்வைதத்தினின்றும் இயற்கையாகவே விடுபட்டவளே
பிரம்மாவின் எல்லையற்ற சக்திவடிவமான வாக்குதேவதையா
ப்ரம்மானந்தம் என்ற உருவமாக பேரின்பம் தருபவளே
துதிப்பவர் இல்லமதில் மங்கலமாய் நிறைந்தவளே
உயர்நலம் அளித்து பெருநிதி தருபவளே
நின்னை நாடி வருவோரை அரசு பீடமதில் அமர்த்துபவளே
ராஜ்ய லக்ஷ்மியாய் விளங்கி பொக்கிஷமதை காப்பவளே

மந்தாரப் பூவினில் மிகுந்த நாட்டம் கொண்டவளே
எல்லாருடைய நேத்ரங்களிலும் நிறைந்திட்டவளே
மூச்சினை தந்துமே மூச்சாக இருப்பவளே
மல்லனைக் கொன்ற மார்த்தாண்ட பைரவரால் போற்றப்பட்டவளே

உயிர்களுக்கும் இந்திரியங்களுக்கும் தெய்வமாய் இருப்பவளே
உயிர்சக்தி இந்திரிய சக்திதனை அருளிடும் சர்வசக்தியானவளே
வீரர்களுக்கு பெற்றவளாய் காட்சி தருபவளே
முக்திக்கே ஆதாரமான ஸ்ரீ ராஜ ராஜேஷ்வரி சக்திகளுக்கு மூலாதாரமானவளே

வாழ்கை சக்கிரமதைச் சுழலச் செய்பவளே
வேதங்களின் ஸ்வாச துடிப்பான காயத்ரியாய் ஜ்வலிப்பவளே
சொல்லில் அடங்காத புகழினைப் பெற்றவளே
மன ஆழமே காணமுடியாதவளாகி அற்புத லீலைகள் செய்திட்டவளே
இயக்கையின் இனியசுகம் கொண்ட மீனாக்ஷியே
மகிழ்வு நிலவாக தவழ்ந்திடும் ஞான மழலையே
அறிஞர்களாலும் சாமானியர்களாலும் ஆராதிக்கப்படுபவளே
தாமரை மலரின் மென்மைக்கு இணையான புன்னகை வடிவானவளே
அரக்கர்களை அழித்திடவே மன அரக்ககுணம் அழிப்பவளே
உலகினையே தன்வயமாக்கி கொண்ட காந்த வடிவானவளே
சத்தியமே உருவாகி ஜென்மமதை உயர்வாக்கிடும் சாவித்ரியானவளே
நித்தமும் நிம்மதியை அளித்திடும் சச்சிதானந்தமானவளே

அறுபத்திநான்கு கலைகளுக்கும் இருப்பிடமானவளே
அறிவுக்கலம்பகமாக மாந்தரை ஆக்கிடும் சரஸ்வதியே
சாத்திரங்களை உண்டாக்கியும் சாத்திரங்களால் அறியப்பட்டவளே
தன்மமே உருவான மங்கலச் சிவனுக்கு கொடை என்ற இதயமாகிவிட்டவளே
தகைசான்ற அறவோர்க்கு மோக்ஷ்மதை தருபவளே
தக்ஷிணாமூர்த்தியின் வடிவமாகி சனகாதிகளால் வணங்கப்பட்டவளே
அன்பே உருவானவளாகி பாசத்தின் எழில் நிலையானவளே
கனிவுமேகமாகி காலமெல்லாம் காத்திடும் மஹா காளியானவளே

மஹா உக்ர வடிவான மாதாவே
சண்டன் முண்டன் என்ற அரக்கர்களை அழித்தவளே
விரதங்களில் எல்லையற்ற ஆசை கொண்டவளே
பூஜை செய்வதற்கு உகந்த புனிதமானவளே
மேருவில் நிலைத்திட்ட மேன்மையானவளே
சகல கலைகளையும் ஹாரமாக அணிந்தவளே
மிகவும் புராதனமான புனிதவதியே
இசையில் அளவிடமுடியாத ஆசை கொண்டவளே
உயிரினிலே நிலைத்திருந்து உயிரையே காப்பவளே
உள்நோக்கில் காணப்படும் ஆன்ம உருவானவளே
அணுக்களில் அணுவேயான பரமா அணு ஆனவளே
பிரம்ம சக்தியாகி பிரம்மானந்த வடிவானவளே

முக்திக்கே இருப்பிடமாகி முக்திதனை அளிப்பவளே
எல்லா சக்திகளுக்குமே மூலாதாரமான ஸ்ரீ ராஜ ராஜேஷ்வரியானவளே
பிறப்பு, இறப்பு, முதுமை என்ற துயரங்களைத் துடைப்பவளே
மேட்ச இன்பம் தந்து அமைதி என்ற அருமருந்து அளிப்பவளே

கடல்சூழ்ந்த பூமி வடிவமான காருண்ய தாயே
எங்குமே நிறைந்திருந்து யாவரையும் தன்வயமாக்கிக் கொள்பவளே
குருமண்டலமாக விளங்கி காமகலா ரகசியம் போதிப்பவளே
மாயையாகி மதுமதி என அழைக்கப்படுபவளே

சிவ தத்துவமதை அளித்து சிவம் ஆகிவிட்டவளே
ஆனந்தமதின் உயிர்க் கலையாகி உள்ளமெல்லாம் பூரிப்பவளே
தில்லைக் கூத்தன் நடனத்திற்கு ஈடு கொடுத்திட்ட தாயே
நந்தி தேவனால் உபாசனைச் செய்யப்பட்ட நற்கதி தரும் தாயே
அழைத்திடும் குரல் கேட்டு ஓடோடி வருபவளே
அரவணைத்தே பக்தர்களை மகிழச் செய்பவளே
காவியக் கலைகளின் நாயகியாகி கலைகளின் பெருநதியானவளே
சத்தியமென்ற நிலைக்களனாகி சத்தியமாய் நிலைத்து நிற்பவளே
என்றும் மகிழ்வுடனே இருந்து பாலக் கதிரவனாய் ஒளி ஊட்டுபவளே
தனக்குள் தானேயாகி தன்னையே மிகவும் ரசிப்பவளே
விஷ்ணு மஹாசக்தியாகி விஷ்ணுவாகவே ஆனவளே
சாமகானமதில் வெகுவாய் பிரியம் கொண்டவளே

எப்போதுமே இருப்பவளாகி அழிவற்ற செல்வங்களின் நாயகியானவளே
உலகங்கள் யாவற்றையும் வென்றவளாகி சர்வ குணங்களையும் கடந்தவளே
பரிவு என்ற மென்பஞ்சு போன்ற உளம் நிறைந்தவளே
பாலாம்பிகையாக வந்திட்ட கன்யாகுமரியானவளே
சிந்திக்கும் வேளையிலே சிவன் அரிசாரமான த்ருபுராம்பிகையானவளே
சாதகச் சக்ரமதின் அதிதேவதையான த்ருபுராஷ்ரீயை வயமாக்கிக் கொண்டவளே
சோம சூர்ய அக்னி குண்டங்களுக்கும் அன்னையான ஸ்ரீ பராசக்தியே
முழுமையான அழகு பொருந்தியவளாகி யாவற்றுக்கும் முன்பு தோன்றிய ஸ்ரீ த்ருபுராம்பிகையே

பிறப்பென்ற துன்ப நெருப்பினை அனைத்திடும் அமிருத மழையானவளே
பாபமென்ற பெரும் காட்டை அழித்திடும் பெரும் தீயானவளே
தரித்திரம் என்ற இலவம் பஞ்சை பறந்திடச் செய்யும் சூரைக்காற்று ஆனவளே
முதுமை என்ற காரிருளை நீக்கிடும் வெயில் ஒளியானவளே
நல்வினை என்ற கடலுக்கு நிலா ஆனவளே
அடியவர் உள்ளமான மயூரத்துக்கு மேகமாய் இருப்பவளே
பிணியென்ற பர்வதமதை தூளாக்கும் வஜ்ராயுதமாய் வருபவளே
மரணமென்ற மரத்தினை சாய்க்கும் கோடரியாய் ஆனவளே

எல்லா ஆபத்துக்களையும் நீக்கி தனதான்யம் தருபவளே
சதாசிவன் தர்மபத்தினியாகி பதிவிரதா தெய்வம் ஆனவளே
வணங்குபவர்க்கு அஷ்ட ஐஷ்வர்யம் அறிவு ஞானம் அளிப்பவளே
ஐம்பெரும் யாகங்களில் கரைகாண முடியாத பற்றுள்ளவளே
சுவாசினி வடிவமாகி சுவாசினி பூஜையால் உள்ளம் சிலிர்ப்பவளே
சின்முத்திரையாய் ஞானமுத்திரை வடிவமானவளே
முக்குண உருவமாகி முக்குணத் தாயானவளே
முக்கோணமதைக் கண்டவளே
அதிசய சரிதம் படைப்பவளே
எங்கள் அன்னையே
ஆறு உபாசனா வழிகளைக் கடந்த ஞான மலரானவளே
காரணம் பார்க்கமலேயே கருணையை பொழிபவளே
அக்ஞான இருள் அகற்றும் மெய்ஞான சுடரொளியானவளே
ஸ்ரீ சக்ரமதில் வாசம் செய்யும் சகல மங்கலங்களின் தாயானவளே
ஸ்ரீ மஹா த்ரிபுர சுந்தரியே

சிவனும் சக்தியும் ஒன்றேயென்ற உயர்நெறி சாரமதைத் தருபவளே
சொல்லும் விளக்கமும் ஒன்றற தழுவினாற் போன்ற சிவசக்தி ஐக்ய வடிவமே
ஸ்ரீ சக்ரமதில் மேல்நோக்கும் நான்கு முக்கோண சிவசக்கிரமும்
கீழ்நோக்கிய ஐந்து முக்கோண சக்தி சக்கிரமும்
இணைந்திட்டது போன்ற சிவசக்தி ரூபிணியே
அழிவற்றவளே
நித்ய பேரானந்த நிலையானவளே
மாதா ஸ்ரீ லலிதாம்பிகையே
மாதா ஸ்ரீ லலிதாம்பிகையே
மாதா ஸ்ரீ லலிதாம்பிகையே



Credits
Writer(s): L.krishnan, V.r. Varadarajan
Lyrics powered by www.musixmatch.com

Link