Asaiyum Yaavum

ஏன் அசைகிறோம் என்று கேட்கிறாய்?
உயிரோடிருப்பதை அறிவிக்க!
ஏன் சுழல்கிறாய் என்று
பூமியைக் கேட்பாயா?

சில நேரம் மரம் ஆவோம்
கிளைகள் அசைப்போம்
இலையால் இசைப்போம்
சிறகிழந்த சருகாய் விழுவோம்
விழுந்தும் அசைவோம்!
மிதிக்காதே எம்மை

எம் அசைவை சிலர் நடனம் என்பர்
நாங்கள் அதை மூச்சென்போம்
முடியக் கூடாதல்லவா?

பாடல் நிறுத்திப் பார்க்கிறாய்
நிற்போம் என்று நினைத்தாயோ?
எம் இதயத்துடிப்பில் இசை செய்வோம்
எம் வலிகள் சேர்த்து மொழி செய்வோம்
அப்போது என்ன செய்வாய்?

எம் அசைவைப் பார்க்க யாரும் வேண்டாம்
பாராட்ட கரவொலி வேண்டாம்
கொண்டாட விருதுகள் வேண்டாம்
இந்த ஆட்டம் உனக்கல்ல
எமக்கு!

சில நேரம் நதியாவோம்!
காட்டைக் கிழித்து
வழியை அமைத்து
வளைந்து அலைந்து
விழுந்து எழுந்து
குறுகிப் பெருகி
துள்ளிக் குதித்து ஓடிடுவோம்
ஏன் என்று காரணம் கேட்காதே
அது தெரிந்தால் நாங்கள் மனிதராகிவிடுவோம்!

தவழும் மேகம்; சிந்தும் மழை
நனையும் காகம்; பொங்கும் அலை
நெளியும் புழு; கொதிக்கும் உலை
சீறும் காலம்; மாறும் நிலை
திரியும் மிருகம்; எரியும் மலை

மனிதன் கடவுள் எந்திரம் என்று
சூரியன் சுற்றும் கோள்கள் என்று
விரியும் சுருங்கும் அண்டம் என்று
அசையும் யாவும் யாம்!



Credits
Writer(s): Madan Karky, Sam C.s.
Lyrics powered by www.musixmatch.com

Link